வலம்புரிவிளை குப்பை கிடங்கில் டிசம்பர் மாதத்துக்குள் குப்பைகள் அகற்றப்படும் - ஆணையர் ஆனந்தமோகன்
வலம்புரிவிளை குப்பை கிடங்கில் டிசம்பர் மாதத்துக்குள் குப்பைகள் அகற்றப்படும் என ஆணையர் ஆனந்தமோகன் கூறினார்.
Update: 2024-01-11 06:07 GMT
குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் நாள் ஒன்றுக்கு சுமார் 110 டன்னுக்கும் அதிகமாக குப்பைகள் குவிந்து வந்தது. இந்த குப்பைகள் வலம்புரிவிளை உரக்கிடங்கில் கொட்டப்பட்டு வந்தது. அங்கு குப்பைகள் மலைபோல் குவிந்தது. மேலும் அடிக்கடி தீ விபத்தும் ஏற்பட்டு வந்ததுடன், துர்நாற்றமும் வீசியது. இந்த உரக்கிடங்கை இடம் மாற்றம் செய்வதில் பெரும் சிக்கல்கள் எழுந்தன. இதன் அடிப்படையில் மாநகர பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை பயன்படுத்தி அந்தந்த பகுதிலேயே உரம் தயாரிக்க மாநகராட்சி முடிவு செய்தது இதற்காக மாநகர பகுதியில் 11 இடங்களில் நுண்ணுயிர் உரக்கிடங்கு அமைக்கப்பட்டது. நுண்ணுயிர் உரக்கிடங்கு செயலாக்கத்துக்கு வந்த பின், வலம்புரி விளையில் குப்பை கொட்டுவது தடை செய்யப்பட்டது. அடுத்த கட்டமாக வலம்புரிவிளையில் மலைபோல் குவிந்த குப்பைகளை, பயோ மைனிங் முறையில் மாற்றிட சுமார் ₹10 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் மூலம் தற்போது குப்பைகளை தரம் பிரிக்கும் பணிகள் நடக்கின்றன. வலம்புரிவிளை உரக்கிடங்கில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 300 மெட்ரிக் டன், குப்பைகள் கிடந்தன. இவற்றில் தற்போது வரை 18 ஆயிரத்து 170 மெட்ரிக் டன் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டுள்ளன. இன்னும் 98 ஆயிரத்து 130 மெட்ரிக் டன் குப்பைகள் தரம் பிரிக்கப்பட வேண்டும். இந்த பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்த வருட இறுதிக்குள் இந்த பணிகள் முடிவடையும் என எதிர்பார்ப்பதாக ஆணையர் ஆனந்தமோகன் கூறினார்.