வரத்து குறைவால் பூண்டு விலை அதிகரிப்பு

திருச்சியில் பூண்டு வரத்து குறைவாக உள்ள நிலையில் பூண்டு விலை அதிகரித்துள்ளது.

Update: 2024-02-14 07:05 GMT

வரத்து குறைவால் பூண்டு விலை அதிகரிப்பு

திருச்சி காந்திசந்தை, பால்பண்ணை, உறையூா் பகுதிகளில் உள்ள பூண்டு மொத்த மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், கொடைக்கானல், வெளிநாட்டிலிருந்து பூண்டு இறக்குமதி செய்யப்பட்டு, திருச்சி மாவட்டம் மற்றும் இதர மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. நாள்தோறும் சுமாா் 200 டன் அளவுக்கு பூண்டு வரத்து இருந்த நிலையில், தற்போது 70 முதல் 100 டன் அளவுக்கே பூண்டு வரத்து உள்ளது. பொதுமக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் நாட்டுப்பூண்டு வகைகளுக்கு வடமாநிலங்களில் தேவை அதிகரித்துள்ளதால், திருச்சிக்கு வரத்து குறைவாக உள்ளது. இதன் காரணமாக, கடந்த சில நாள்களாக பூண்டு விலை அதிகரித்துள்ளது. இது குறித்து திருச்சி காந்திச்சந்தை பூண்டு மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரி ஆா். வெங்கடேசன் கூறியதாவது: விதைப்பூண்டு உதகையில் உற்பத்தி செய்யப்பட்டு, மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற வடமாநிலங்களுக்கு அனுப்பி விளைவிக்கப்பட்டு, தேனி மாவட்டம் வடுகப்பட்டியில் விலை வைக்கப்படுகிறது. இப்படி வித்தியாசமான முறையில் விளைவிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படும் பூண்டானது பருவகால மாற்றத்தால் விளைச்சல் குறைந்ததால், தமிழகத்துக்கு வரத்து குறைந்து, விலை உயா்ந்துள்ளது. தற்போது அறுவடை காலம் தொடங்கியிருந்தாலும், வடமாநிலங்களில் பூண்டின் தேவை அதிகரித்துள்ளதால், விலை குறையவில்லை. அடுத்த சில வாரங்களில் வரத்து அதிகரித்து விலை குறைய வாய்ப்புள்ளது என்றாா் அவா். திருச்சி காந்தி சந்தையில் செவ்வாய்க்கிழமை பூண்டு வகைகள் விற்பனை விலை (கிலோவுக்கு) நிலவரம் (அடைப்புக்குறிக்குள் பழைய விலை): நாட்டுப்பூண்டு (பெரியது) - ரூ. 420 (ரூ. 340) நாட்டுப்பூண்டு (சிறியது) - ரூ. 260 (ரூ. 170) சீனா பூண்டு (பெரியது) - ரூ. 450 (ரூ. 380) சீனா பூண்டு (சிறியது) - ர. 400 (300) மலைப்பூண்டு - ரூ. 500 (ரூ. 450)
Tags:    

Similar News