புனித வெள்ளி: கும்பகோணத்தில், தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி
புனித வெள்ளியையொட்டி கும்பகோணத்தில், தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
ஏசு மனித குலம் முழுவதையும் பாவத்திலிருந்து மீட்பதற்காகவும், இறைவாழ்வை மனிதருக்கு அளிப்பதற்காகவும் துன்பங்கள் பல அனுபவித்து சிலுவையில் இறந்தார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. கிறிஸ்தவ வழிபாட்டில் முக்கியமானது புனித வெள்ளி நாள்.
இயேசு உயிர்பெற்றெழுந்த தினத்தை ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு 40 நாட்கள் தவக்காலமாக கடைப்பிடிக்கப்படுகிறது. தவக்காலத்தின் தொடக்கமாக சாம்பல் புதனையொட்டி கடந்த 14-ந் தேதி பேராலயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது.
கடந்த 24-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று குருத்தோலை ஞாயிறு சிறப்பு பவனி நடந்தது. அன்று முதல் புனித வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் இரவு தனது சீடர்களுக்கு திருவிருந்து அளித்தார்.
அன்றைய நாளில் தனது சீடர்களின் பாதங்களை இயேசு கழுவினார். இதனை நினைவு கூறும் வகையில், பெரிய வியாழன் நாளில் அனைத்து தேவாலயங்களிலும் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன்படி கும்பகோணம் தூய அலங்கார அன்னை பேராலயத்தில் புனித வியாழனை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் ஜீவானந்தம் அமலநாதன் முதியவர்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டார். இதில் பங்குதந்தை பிளமின்தாஸ், கவ்வி செயலர் கஸ்பார், மறைமாவட்ட செயலர் பெர்பிட், ஆயரின் செயலர் அருள் உள்பட பலர் கலந்து கொண்டனர். புனித வெள்ளியையொட்டி இன்று(வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை சிறப்பு ஆராதனை நடக்கிறது.
தொடர்ந்து மாலை 6 மணிக்கு சிலுவை பாதை நிகழ்வு நடக்கிறது. இதே போல் கும்பகோணத்தில் அனைத்து தேவாலயங்களிலும் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திராளன கிறிஸ்தவர்கள் கலந் துகொண்டு பிரார்த்தனை செய்தனர்.