அரசு காண்ட்ராக்டர் சங்க ஆலோசனை கூட்டம்

காங்கேயத்தில் நடந்த திருப்பூர் மாவட்ட அரசு சார்ந்த காண்ட்ராக்டர் சங்கங்கள் ஆலோசனை கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Update: 2024-02-28 03:47 GMT

காங்கேயம் தாராபுரம் சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் திருப்பூர் மாவட்ட அரசு சார்ந்த காண்ட்ராக்டர் சங்கங்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊரக வளர்ச்சி ஒப்பந்ததாரர்கள் சங்கத் தலைவர் தங்கமுத்து தலைமை தாங்கினார். செயலாளர் வடிவேல் முருகன் துணைச் செயலாளர் சண்முகசுந்தரம், பொருளாளர் நாகராஜ் மற்றும் நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர்கள் சங்கம் வீரகுமார், சேமலையப்பன், முருகானந்தம் ,ஜெகதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அரசு ஒப்பந்தங்களில் கலந்து கொண்டு அரசு டெண்டர் எடுக்கும் ஒப்பந்ததாரர்கள் உரிய தொகை, நேரம், மூலப்பொருட்கள், ஆட்கள் போன்ற முக்கிய ஆதாரங்களை வைத்து ஒப்பந்தத்தை அரசு முழுமையாக முடித்து தர வேண்டும்.  இந்த நிலையில் தற்போது எம்.சேன்ட்(பழைய விலை ரூ. 2400/புதிய விலை ரூ. 4000), பி.சேன்ட்(பழைய விலை ரூ. 3000/புதிய விலை ரூ. 5000) மற்றும் ஜல்லி(பழைய விலை ரூ. 1600/புதிய விலை ரூ. 3000)போன்ற மூலப்பொருள்களின் விலையேற்றதால் ஒப்பந்தத்தை ஒப்பந்த‌ பத்திரப்படி முடிக்க முடியவில்லை என்று ஒப்பந்ததாரர்கள் பலவித குறைகளை முன்வைத்து மூலப்பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் முதற்கட்டமாக இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இன்று 27ஆம் தேதி முதல் மூலப்பொருள்களின் விலை குறையும் வரை வேலை நிறுத்தம் செய்வதெனவும், நாளை  29ஆம்‌ தேதி சேலத்தில் நடைபெறுகின்ற உண்ணாவிரத போராட்டத்தில் திரளாக கலந்து கொள்வதெனவும், மாவட்ட ஆட்சியரை சந்தித்து மூலப்பொருள்களின் விலையை குறைக்க கோரியும், மேலும் மீதமுள்ள பணிக்களுக்கு அபராதம் மற்றும் நடவடிக்கை எடுக்க கூடாது எனவும் மனு அளிக்க போவது என்றும், விஜயமங்கலம் டோல்கேட் அருகில் நடைபெறும் போராட்டத்தில் வாகனங்களுடன் சென்று கலந்து கொள்ள உள்ளோம் எனவும், மூலப்பொருளின் விலை குறையும்‌ வரை யாரும் ஒப்பந்தத்தில் கலந்து கொள்வதில்லை எனவும் சுமார் 5 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை ஒப்பந்ததாரர்கள் சங்கம், நெடுஞ்சாலை துறை சங்கம், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மற்றும் மாநகராட்சி ஒப்பந்ததாரர் சங்கத்தினை சார்ந்த அரசு ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News