உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதை
காரைக்குடியில் உடல் உறுப்பு தானம் செய்த பெண்ணின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
Update: 2024-06-14 08:10 GMT
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நவரத்தின நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவர் மதுரையில் தொழில் செய்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது சொந்த ஊரான காரைக்குடிக்கு ஒரு திருமண நிகழ்ச்சிக்காக தனது மனைவி ஆனந்தவள்ளியுடன் (54). வந்திருந்தார். அதன் பின்பு கணவன், மனைவி இருவரும் 9ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது கல்லூரி சாலை, செக்காலை வீதி சந்திப்பில் பின்னால் வந்த கார் இவர்களது இருசக்கர வாகனத்தில் மோதியுள்ளது, இதில் பின்னால் அமர்ந்திருந்த ஆனந்தவள்ளி தலையில் படுகாயம் அடைந்து காரைக்குடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஆனந்தவள்ளி மூளைச்சாவு அடைந்துள்ளார். அதன் காரணமாக கணவர் மற்றும் குடும்பத்தார்கள் ஆனந்தவள்ளியின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முடிவு செய்து, மதுரை மருத்துவமனையில் இரு கண்கள், சிறுநீரகம், கல்லீரல் ஆகியவற்றை தானமாக வழங்கியுள்ளனர். ஆந்தவள்ளியின் உடல் அவரது சொந்த ஊரான காரைக்குடிக்கு கொண்டு வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து உடல் உறுப்புகளை தானம் செய்த ஆனந்த வள்ளியின் உடலுக்கு தேவகோட்டை கோட்டாச்சியர் பால்துரை மற்றும் காரைக்குடி வட்டாட்சியர் தங்கமணி ஆகியோர் நேரில் வந்து மாலையிட்டு அரசு மரியாதை செய்தனர். அதன் பின்பு ஆனந்தவள்ளியின் உடலை குடும்பத்தார்கள் நல்லடக்கம் செய்தனர்.