அரசு பஸ் பாலத்தில் மோதி விபத்து: பயணிகள் காயமின்றி தப்பினர்
ஆழ்வார்திருநகரி அருகே அரசு பஸ் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக 30 பயணிகள் காயமின்றி தப்பினர்.
By : King 24x7 Angel
Update: 2024-02-14 06:02 GMT
நெல்லையில் இருந்து அரசு பஸ் 30 பயணிகளுடன் திருச்செந்தூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சை மேலப்பாளையத்தை சேர்ந்த மணி (57) என்பவர் ஓட்டிச்சென்றார். இரவு 8.10 மணியளவில் தென்திருப்பேரை அருகே உள்ள ஆத்தூரான்கால் பாலம் பகுதியில் முன்னால் மோட்டார் சைக்கிளில் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அவர் திடீரென்று மோட்டார் சைக்கிளை வலது புறமாக திருப்ப முயன்றுள்ளார். இதனால் அந்த மோட்டார் சைக்கிள் மீது பஸ்மோதாமல் இருப்பதற்காக, டிரைவர் பஸ்சை நிறுத்த முயன்றுள்ளார். இதில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக 30 பயணிகளும் காயமின்றி உயிர் தப்பினர். தகவல் அறிந்து வந்த ஆழ்வார்திருநகரி போலீசார் பயணிகளை பத்திரமாக இறக்கி, மாற்றி பஸ்சில் ஏற்றி விட்டனர். இந்த விபத்து குறித்து ஆழ்வார் திருநகரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.