ஆக்கிரமிப்பில் சிக்கிய அரசு நிலம்: எம்.எல்.ஏ விரக்தி
ஆக்கிரமிப்பில் சிக்கிய அரசு நிலத்தை மீட்க எம்எல்ஏ அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
பூந்தமல்லியில் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், அரசு திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை. வருவாய்துறை அதிகாரிகள் நேர்மையாக செயல்பட்டு ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க வேண்டும்,'' என பூந்தமல்லி தி.மு.க., எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி பேசினார்.
பூந்தமல்லி தாலுகா அலுவலகத்தில், ஜமாபந்தியில் உடனடியாக தீர்வு காணப்பட்ட 150 மனுதாரர்களுக்கு நலத்திட்டஉதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. பூந்தமல்லி தாசில்தார் கோவிந்தராஜ் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர். இதில் பூந்தமல்லி தி.மு.க., - எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கிருஷ்ணசாமி பேசியதாவது: பூந்தமல்லியில் பல ஏக்கர் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது. குளம், குட்டைகளை மூடி, கட்டடம் கட்டி சிலர் வாடகைக்கு விட்டுள்ளனர். அரசு நிலம் இல்லாததால், அரசு மருத்துவமனை, சமூதாய கூடம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த இடமில்லை.
அரசு திட்டங்களை செயல்படுத்த தனியார் நிலத்தை வாங்க வேண்டுமானால் ஏக்கருக்கு, ஆறு கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்ய வேண்டியுள்ளது. இதனால், பூந்தமல்லியில் இலவச வீட்டுமனைப்பட்டா கேட்பவர்களுக்கு கொடுக்க அரசு நிலம் இல்லாமல், திருவள்ளூரில் கொடுக்கின்றனர். எனவே இருக்கும் அரசு நிலத்தையாவது பாதுகாக்க வேண்டும்.
வருவாய்துறை அதிகாரிகள் நேர்மையாக செயல்பட்டு, பூந்தமல்லி பகுதியில் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள அரசு நிலங்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.