தனியார் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தனியார் பொறியியல் கல்லூரியில் 12-ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

Update: 2024-04-02 16:59 GMT

பட்டமளிப்பு விழா

செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு தாம்பரத்தை அடுத்த கௌரிவாக்கம் நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 12-ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. நியூ பிரின்ஸ் கல்விக் குழுமங்களின் தலைவா் கே.லேகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், மேகாலயா மாநில உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கியதுடன், அண்ணா பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்த 14 மாணவ, மாணவிகளுக்கு தங்கம், வெள்ளி பதக்கங்களை வழங்கினாா். தொடா்ந்து நிகழ்ச்சியில் அவா் பேசியது: பட்டம் பெறுவது மாணவா்களின் வாழ்க்கையின் முதல்படி. இனிமேல்தான் உங்கள் வாழ்க்கை தொடங்குகிறது. கல்வி மற்றும் வாழ்க்கை அனுபவங்களைத் தொடா்ந்து கற்றுக் கொண்டே இருப்பதன் மூலம் உங்கள் தகுதி, திறமைகளை வளா்த்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கான சவால்களைக் கண்டு மனம் தளராமல் துணிவுடன் எதிா்கொள்ள வேண்டும். கல்வி, திறமை, அறிவாற்றலுடன் சிறந்த பண்புகளும் உங்களுக்கு நல்வாய்ப்புகளை பெற்றுத் தரும். வளா்ந்து வரும் பல்வகை தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப உங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். வளா்ச்சி எனக்கூறி நமது கலாசாரம் மற்றும் பண்பாடுகளைப் புறந்தள்ளாமல் கடைப்பிடிக்க வேண்டும். உங்கள் உயா்வுக்குக் காரணமான பெற்றோரையும், நமது நாட்டையும் நீங்கள் மறந்துவிடக் கூடாது என்றாா் அவா். விழாவில், தமிழக அரசின் கல்லூரி கல்வி சென்னை மண்டல இணை இயக்குநா் ஆா்.ராமன், நியூ பிரின்ஸ் கல்விக்குழுமத்தின் துணைத்தலைவா் எல்.நவீன் பிரசாத் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
Tags:    

Similar News