மயான நிலம் மீட்பு - அதிகாரிகளுக்கு பொதுமக்கள் நன்றி
திருச்செங்கோடு அருகே, எலச்சிபாளையம் ஒன்றியம், கொன்னையார் கிராமம் சக்கராம்பாளையம் அருந்ததியர் தெரு மக்களுக்கு பாத்தியப்பட்ட மயானம் கடந்த 300 ஆண்டு காலமாக இருந்தது. அதன் அருகில் உள்ள விவசாய நிலத்தை சண்முகம் என்பவர் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு விலைக்கு வாங்கி அதனை அரசு நில அளவிற்கு படிக்கட்டி அளக்காமல் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு அருந்ததியர் சமூக மக்களுக்கு பாத்தியப்பட்ட சுடுகாட்டை ஆக்கிரப்பு செய்து, அதிலிருந்த பனைமரம், வேப்பமரம் உள்ளிட்டவைகளை வேரோடு பிடுங்கி மூன்று லாரிகள் மூலம் விற்பனை செய்துள்ளதாக கூறி பொதுமக்கள் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி. மற்றும் வட்டாட்சியர் விஜயகாந்த் அவர்களிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. போர்க்கால அடிப்படையில் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து நேற்று, குறுவட்ட நிலஅளவையர் கமல்ராஜ் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் வருவாய் ஆய்வாளர் அனுராதா உள்ளிட்டோர் நேரில் சென்று அளவீடு செய்து ஆக்கிரமிப்புகள் இருப்பதை அளவீடு மூலம் உறுதி செய்து அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றினார்கள். மேலும், காவல் உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன், வெங்கடாசலம், கௌதம் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் நேரில் வந்து கோரிக்கை மனு கொடுத்த 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுத்ததை பொதுமக்களின் சுடுகாட்டு நிலத்தை மீட்டுத் தந்த அதிகாரிகளுக்கு இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.