நிலக்கடலை, தட்டை பயிர் சாகுபடி பணிகள் மும்முரம்
தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானூர் பட்டியில் நிலக்கடலை மற்றும் தட்டைப்பயிர் சாகுபடியில் விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றனர்.
தஞ்சாவூர் அருகே திருக்கானூர்பட்டியில் பம்ப்செட் தண்ணீரை பயன்படுத்தி தட்டைப்பயிர் மற்றும் நிலக்கடலை சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். உலக அளவில் இந்தியா எண்ணெய் வித்து உற்பத்தியில் மூன்றாவது இடத்திலும், நிலக்கடலை உற்பத்தியில் முதலிடமும் வகிக்கிறது. இந்தியாவில் எண்ணெய் வித்துப் பயிர்களில் நிலக்கடலை 40 சதவீதம் பரப்பளவில் பயிரிடப்பட்டு முதலிடத்தில் இருக்கிறது. நிலக்கடலையில் 47 சதம் முதல் 53 சதம் வரை எண்ணெய்யும், 26 சதம் புரதச்சத்தும் உள்ளது.
தமிழ்நாட்டில் முக்கிய எண்ணெய் வித்துப்பயிரான நிலக்கடலை 6.19 லட்சம் எக்டரில் சாகுபடி செய்யப்பட்டு 10.98 லடசம் டன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 70 சதவிகிதம் மானாவாரியிலும், 30 சதவிகிதம் இறவையிலும் பயிர் செய்யப்படுகிறது. உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் நிலக்கடலை சாகுபடி மானாவாரி நிலங்களில் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானூர்பட்டியில் நிலக்கடலை மற்றும் தட்டைப்பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியில் ஆற்றுப்பாசனம் இல்லாத நிலையில் வானம் பார்த்த பூமியாக இருந்தது.
பம்ப் செட் சாகுபடிதான் அதிகளவில் மேற்கொள்ளப்ப டுகிறது. அந்த வகையில் திருக்கானூர்பட்டியில் மரவள்ளிக்கிழங்கு, நிலக்கடலை, தட்டைப்பயிர் போன்றவற்றை இப்பகுதி விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது நிலக்கடலை, எள் மற்றும் தட்டைப்பயிர் சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். பல விவசாயிகள் செண்டிப்பூ, சம்பங்கி பூ போன்ற சாகுபடியிலும் ஈடுபட்டுள்ளனர்.