விராலிமலையில் அத்துமீறி கடத்த முயன்ற அரை டன் குட்கா பறிமுதல்
விராலிமலையில் அத்துமீறி கடத்த முயன்ற அரை டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், வட மாநிலத்தவர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
விராலிமலை வழியாக சொகுசு காரில் கடத்திவரப்பட்ட 510 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீஸார் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் கடத்தலில் ஈடுபட்ட வடமாநிலத்தை சேர்ந்த இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் இருந்து குட்கா பொருட்களை ஏற்றிக்கொண்டு சொகுசு கார் ஒன்று மதுரை வந்து அங்கிருந்து புதுக்கோட்டை மாவட்டம்,விராலிமலை வழியாக திருச்சி நோக்கி செல்வதாக விராலிமலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை விராலிமலை அருகே உள்ள வானத்திராயன்பட்டி பிரிவு அருகே போலீஸார் செவ்வாய்க்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியே வேகமாக வந்த ஒரு காரை நிறுத்தி எஸ்ஐ கோவிந்தராஜன் தலைமையிலான போலீசார் சோதனையிட்டனர் இதில், காருக்குள் பிளாஸ்டிக் சாக்குகளில் மூட்டை மூட்டையாக ரூ. 5 லட்சத்து 90 ஆயிரம் மதிப்புள்ள 510 கிலோ குட்கா பொருட்கள் பதுக்கி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இதை தொடர்ந்து, கடத்தலில் ஈடுபட்ட குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த மாலி சம்பா லால் (32) மற்றும் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரோனக் சிங் (21) ஆகியோரை கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து குட்கா பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு காரை பறிமுதல் செய்து இருவர் மீதும் வழக்கு பதிந்து விராலிமலை உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை கிளை சிறையில் அடைத்தனர்.