கும்பகோணத்தில் சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகள் ஒப்படைப்பு
கும்பகோணத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரிந்த 7 மாடுகள் கோசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கும்பகோணம் மாநகராட்சி ஆணையாளர் லட்சுமணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கும்பகோணம் மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகள் பிடிக்கப் பட்டு மாமன்ற ஒப்புதலின் பேரில் மாடுகளுக்கு ரூ. 10 ஆயிரம், கன்றுகளுக்கு ரூ.5 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டன.
கடந்த ஆண்டுகளில் 137 மாடு கள், 47 கன்றுகள் பிடிக்கப்பட்டு மாடுகளை வளர்க்கும் உரிமையாளர்களிடமிருந்து ரூ.16 லட்சத்து 5 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டது. மாடுகளை தங்கள் சொந்த வீட்டில் வைத்து வளர்ப்பதற்கு கட்டணம் செலுத்தி உரிமம் பெறும் படி மாடுகள் வளர்ப்பவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் இதுவரை பலர் மாடுகள் வளர்ப்பதற்கு உரிமம் பெறவில்லை.
எனவே உரிமம் பெறாமல் மாடு வளர்ப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உள்ளோம். மாடுகளை வளர்ப்பதற்கு உரிமம் பெறாமலும், போக்குவரத்துக்குஇடை யூறு ஏற்படும் வகையிலும் நேற்று கும்பகோணம் மாநகரில் சுற்றித்திரிந்த 7 மாடுகள் பிடிக்கப்பட்டு கும்பகோணம் அருகே உள்ள கோசாலைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. எனவே கும்பகோணம் மாநகர எல்லைக்குள் மாடு வளர்ப்பவர்கள் உடனடியாக மாடு வளர்ப்பதற்கான உரிய கட்டணம் செலுத்தி உரிமம் பெற்று சொந்த இடத்தில் மாடுகளை வளர்க்கவேண்டும்.
மாடுகளை பொதுமக்களுக்கு இடையூறு - ஏற்படும் வகையில் வெளியே திரிய விடக்கூடாது. அவ்வாறு திரிய விடப்பட்டால் மாடுகள் பிடிக்கப்பட்டு கோசாலையில் ஒப்படைக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.