கந்து வட்டிக் கொடுமை:ஆட்சியர் அலுவலகம் முன் விவசாயி தீக்குளிக்க முயற்சி

கந்து வட்டிக் கொடுமையால் விரத்தி அடைந்த விவசாயி அரியலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குடும்பத்தினருடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-04-26 06:11 GMT

தீக்குளிக்க முயன்ற விவசாயி 

அரியலூர் அடுத்த சுந்தரேசபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ரங்கநாதன்(60). இவர், பொட்டக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த பாரி என்பவரிடம், தனது நிலத்தை அடமானம் வைத்து ரூ.3 லட்சம் கடன் பெற்றுள்ளார். இதையடுத்து வட்டி தொகையை சேர்த்து தான் பெற்ற கடனுடன் ரூ.5.40 லட்சத்தை திரும்ப அளித்துள்ளார். ஆனாலும், பாரி, நிலத்தை தர மறுப்பதாக கூறப்படுகிறது.

மேலும், கூடுதலாக பணம் கேட்டு மிரட்டுவதாகவும், காவல்துறையிடம் ரங்கநாதன் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் வேதனையில் இருந்து வந்த விவசாயி ரங்கநாதன், தனது மனைவி சந்திரா(50), மகன் பிரகாஷ்(30) ஆகியோரை வியாழக்கிழமை ஆட்சியர் அலுவலகத்துக்கு அழைத்து வந்து, அங்கு அனைவரின் உடலிலும் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சி மேற்கொண்டார். இதையறிந்த அங்கு பணியில் இருந்த காவல் துறையினர், ரங்கநாதன் மற்றும் அவரது குடும்பத்தினரை மீட்டு, அரியலூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News