சரக்கு லாரி மோதியதில் தலைமை பெண் காவலர் பலி !
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அருகே பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு மையத்தில் பணியை முடித்துவிட்டு, வீடு திரும்பிய பெண் காவலர், லாரி மோதிய சாலை விபத்தில் உயிரிழப்பு
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் R. அமுதா என்ற தலைமைப் பெண் காவலர், திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் உள்ள வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பு மையத்தில் பணி முடித்துவிட்டு நேற்று(1.5.2024) இரவு அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் அவரது வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்.
இரவு 11 மணி அளவில், இராசிபுரம் அருகே குருசாமிபாளையம் என்ற பகுதியில் உள்ள புறவழிச் சாலையில் கல்லுமடை பிரிவு அருகே சென்றபோது, அவ்வழியே வந்த சரக்கு லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து, தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளதாகவும், தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச. உமா தெரிவித்துள்ளார். இவ்விபத்தில் உயிரிழந்த தலைமை பெண் காவலர் R. அமுதா, இராசிபுரம் அருகே உள்ள மெட்டலா அடுத்த உடையார்பாளையம் என்ற பகுதியை சேர்ந்தவர்.
கடந்த 2001-ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் பணிக்கு சேர்ந்துள்ளார். இவரது கணவர் செல்வம், விவசாயி ஆவார். மகன்கள் கவியரசு மற்றும் சோலையரசு ஆகியோர் உள்ளனர்.
இந்த விபத்து குறித்த வழக்கில் சரக்கு வாகனத்தின் ஓட்டுநரை கைது செய்து புதுச்சத்திரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.