சேலம் அருகே தலைமை காவலர் கொலை:பட்டறை உரிமையாளர் கைது

சேலம் அருகே போலீஸ் தலைமை காவலரை அடித்துக்கொன்ற இரும்பு பட்டறை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-01-12 14:20 GMT

கைதான பட்டறை உரிமையாளர்

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அடுத்த மின்னாம்பள்ளி பகுதியில் கடந்த 2022-ம் ஆண்டு அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காரிப்பட்டி போலீசார், அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தில் இறந்தது, சேலம் அருகே மெய்யனூர் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் (வயது 55) என்பதும், இவர் சேலம் அரசு ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்தில் ஏட்டுவாக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. இது குறித்து காரிப்பட்டி போலீசார், சந்தேக மரண என வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இதில் சேலத்தை அடுத்த சங்ககிரி அருகே அத்திமரப்பட்டி பகுதியை சேர்ந்த இரும்பு பட்டறை உரிமையாளரான பஞ்சர் குமார் என்ற விஜயகுமார் (52) என்பவர், கொலை வழக்கு சம்பந்தமாக போலீஸ் நிலையத்துக்கு வரும்போது, ஏட்டு ஜெயராமனுடன் நட்பு ஏற்பட்டு உள்ளது. அவர்கள் இருவரும் கருமந்துறை பகுதிக்கு சாராயம் குடிக்க சென்று விட்டு மீண்டும் வரும்போது, மின்னாம்பள்ளி அருகே தகராறு ஏற்பட்டு, ஜெயராமனை விஜயகுமார் கல்லால் தாக்கி விட்டு தப்பியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, விஜயகுமார் கடந்த ஒரு ஆண்டாக தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில், நேற்று கருமந்துறைக்கு மீண்டும் சாராயம் குடிக்க சென்றுள்ளார். அப்போது வாழப்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஹரிசங்கரி தலைமையிலான தனிப்படை போலீசார், விஜயகுமாரை பிடித்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

போலீஸ் விசாரணையில் அவர் போலீஸ் ஏட்டுவை அடித்துக்கொன்றது தெரியவந்தது. இதையடுத்து. சந்தேக மரண வழக்கை ஒரு ஆண்டுக்கு பிறகு கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து கைதான விஜயகுமாரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News