கோவையில் கொட்டி தீர்த்த கனமழை
குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கோவை புறநகரில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது.இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் அடுத்த ஒருவாரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.குறிப்பாக கோவை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யக் கூடும் என கணிக்கப்பட்டிருந்தது.
கோவை பகுதிகளில் காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் கடுமையான உஷ்ணம் நிலவியது.இந்த நிலையில் பிற்பகலில் கரு மேகங்கள் சூழ்ந்து பெய்ய துவங்கிய மழை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்தது.இருகூர்,பள்ளபாளையம்,சூலூர் காங்கேயம் பாளையம்,காடாம்பாடி,காமாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதே போல கோவை மாநகர பகுதிகளிலும் பரவலாக கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.