சூறைக்காற்றுடன் பலத்த மழை: மரங்கள், மின்கம்பம் சரிந்தன!

தென்திருப்பேரை, ஆழ்வார்திருநகரியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் மரங்கள், மின்கம்பம் சரிந்தன.

Update: 2024-06-03 09:31 GMT

தென்திருப்பேரை, ஆழ்வார்திருநகரியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் மரங்கள், மின்கம்பம் சரிந்தன.

தமிழகத்தில் அக்னி நட்சத்திர வெயில் முடிந்த பிறகும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் தென்தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று காலையில் வழக்கம்போல் வெயில் கோரமுகத்தை காட்டியது. தென் திருப்பேரை, ஆழ்வார்திருநகரி சுற்று வட்டார பகுதிகளில் மதியம் வானில் திடீரென்று கருமேகங்கள் திரண்டு குளிர்ச்சியான சூழல் நிலவியது. மதியம் 2.15 மணியளவில் சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டியது.

சுமார் 45 நிமிடம் நீடித்த கனமழையால் தெருக்கள், சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. தென்திருப்பேரை மாவடிப்பண்ணை ஊருக்கு செல்லும் வழியில் உள்ள பழமைவாய்ந்த வேப்ப மரம் சூறைக்காற்றில் வேருடன் சரிந்து சாலையில் விழுந்தது. அப்போது அந்த வழியாக யாரும் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சரிந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியில் அப்பகுதியினர் ஈடுபட்டனர். தென்திருப்பேரை அருகே அண்ணாநகரில் சாலையோரம் நின்ற வாதவடக்கி மரம், வேப்ப மரம் சரிந்து மின்கம்பத்தில் விழுந்தன. இதனால் மின்கம்பம் முறிந்து விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது. அங்குள்ள பாலசுப்பிரமணியன் என்பவரது வீட்டின் மீதும் மரக்கிளைகள் விழுந்ததில் மேற்கூரைகள் சேதமடைந்தன.

உடனே மின்வாரிய ஊழியர்கள் விரைந்து சென்று, சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைத்தனர். ஆழ்வார்திருநகரி சுற்று வட்டார பகுதிகளில் பெய்த திடீர் மழையால் அங்குள்ள செங்கல்சூளைகளில் தயாரித்து வெயிலில் காய வைத்திருந்த ஆயிரக்கணக்கான செங்கல்கள் கரைந்து வீணாகியதாக உரிமையாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். ஏரல், குரும்பூர் சுற்று வட்டார பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளர்ச்சி நிலவியது.

Tags:    

Similar News