5 மாதங்களாக திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் அரசு மருத்துவமனை
5 மாதங்களாக திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் அரசு மருத்துவமனை
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளது திருமழிசை பேரூராட்சி. தற்போது, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஆறு வழிச்சாலையாக மாற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இச்சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் நேரிடுவது தொடர்கதையாக மாறிவிட்டது. தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்ற அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி, திருவள்ளூர் போன்ற அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலும், மேல் சிகிச்சைக்கு சென்னைக்கு தான் செல்ல வேண்டி உள்ளதால் பலர் உயிரிழந்து வந்தனர். இந்த நிலையில், நெடுஞ்சாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.
கடந்த 2022ல் தமிழக அரசு சார்பில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, முதல் 48 மணி நேரத்தில் இலவச சிகிச்சை அளிக்கும் 'நம்மை காப்போம் 48' திட்டம் துவக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் திருமழிசையில், 2023 மார்ச் மாதம் 4 கோடி ரூபாய் மதிப்பில், புதிதாக விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை மருத்துவமனை கட்டடம் கட்டும் பணி துவங்கியது. இந்த புதிய அவசர கால சிகிச்சை மருத்துவமனை கட்டப்பட்டு ஐந்து மாதங்களாகியும், இதுவரை பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வருவது, வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை மருத்துவமனையை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.