ராமநாதபுரத்தில் ஹோட்டல் உரிமையாளர் தாக்குதல்: வைரலாகும் வீடியோ
ராமநாதபுரத்தில் ரவுடிகளின் அடாவடித்தனங்கள் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே உள்ளதொட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் லத்தீப்( 45). இவர் சாயல்குடி கன்னியாகுமரி செல்லும் சாலையில் ஜமாலியா என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வருகிறார்.
5 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் ஹோட்டல் நடத்தி வரும் நிலையில் கடந்த ஜனவரி 21 அன்று இரவு 11 மணி அளவில் நான்கு வாலிபர்கள் ஓட்டலுக்கு வந்துள்ளனர் அப்பொழுது புரோட்டோ உள்ளிட்ட உணவு பொருட்கள் முடிந்து விட்டதால் கடையை அடைப்பதற்காக தயாராகி கொண்டிருந்தார்.
அங்கு வந்த வாலிபர்கள் அப்துல் லத்திப்பிடம் புரோட்டோ போடு என கூறியுள்ளனர். அதற்காக புரோட்டோ தீர்ந்து விட்டது எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நான்கு வாலிபர்களும் ஓட்டலில் சமையலுக்காக வைக்கப்பட்டிருந்த விறகு உள்ளிட்டவற்றால் ஹோட்டல் உரிமையாளரை அடித்து துவைத்தனர். அதிலும் ஆத்திரமடங்காத மர்ம நபர்கள் அருகே இருந்த கல்லாப்பெட்டியை கீழே தள்ளி சேதப்படுத்தியும், மேலும் ஓட்டல் உரிமையாளரை அடித்து துவைத்து எச்சில் இலைகள் போடும் குப்பை தொட்டிற்குள் தூக்கி வீசினர் .
சமூக விரோதிகளின் தாக்குதலில் படுகாயம் அடைந்த ஹோட்டல் உரிமையாளர் அப்துல் லத்திப் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மேலும் ஹோட்டல் உரிமையாளர் அப்துல் லத்தீப் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், காவல் நிலையம் சென்ற வர்த்தக சங்க நிர்வாகிகள் நான்கு நாட்களாகியும் இதுவரை குற்றவாளிகளை ஏன் கைது செய்யவில்லை என காவல்துறையினரிடம் முறையிட்டனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில்; சாயல்குடியில் சமீப காலங்களாக ரவுடிகளின் தொல்லை அதிகளவு உள்ளது என்றும், சிசி டிவி கேமராக்களின் பதிவுகளை காவல்துறையினரிடம் அளித்தும் குற்றவாளிகளை பிடிக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும்,, இரவு நேர ரோந்து பணிகளில் போலீசார் மெத்தனம் காட்டுவதாகவும்,
இதுபோன்ற வியாபாரிகள் மீது தாக்குதல் நடத்தும் ரவுடிகள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லையெனில் வணிகர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் என்றும் வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.