கந்தர்வகோட்டையில் கடைகளின் பூட்டை உடைத்து மர்மநபர் கொள்ளை
கந்தர்வகோட்டையில் கடைகளின் பூட்டை உடைத்து மர்மநபர் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் அமைந்துள்ள இரு வெவ்வேறு கடைகளின் பூட்டை இரும்பு கம்பியால் உடைத்து ஒரு மர்ம நபர் கொள்ளை அடிக்க முயலும் சிசிடிவி கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவது அந்த பகுதி வணிகர்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்திலிருந்து தஞ்சை செல்லும் சாலையில் பெரியசாமி என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையின் பூட்டை நேற்று (5 ஆம் தேதி) நள்ளிரவு 1 மணியளவில் மர்ம நபர் ஒருவர் இரும்பு கம்பியால் உடைக்கும் காட்சிகளும் பின் கதவை கையால் இழுத்து உடைக்கும் காட்சிகளும் அந்த கடையை பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
மேலும் அந்த நபர் சம்பந்தப்பட்ட கடையின் பூட்டை உடைத்து உள்ளே செல்ல நீண்ட நேரம் போராடுவதும் அது முடியாமல் போகவே அங்கிருந்து திரும்பச் செல்லும் காட்சிகளும் அதில் பதிவாகியுள்ளது. மேலும் அதே பகுதியில் உள்ள வெல்டிங் கடையின் பூட்டை உடைக்கும் காட்சிகளும் சிசிடிவி காட்சிகளில் பதிவாகி உள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில்,
ஏற்கனவே கந்தர்வகோட்டை பகுதியில் இதேபோன்று சில திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளதால் இதனை பார்த்த அந்தப் பகுதி வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து நாம் கந்தர்வகோட்டை காவல்துறையினரிடம் நாம் கேட்டபோது சம்பந்தப்பட்ட கடையில் திருட்டு போகாததால் இது குறித்து இன்னும் வழக்கு பதிவு செய்யவில்லை எனவும் எனினும் தொடர்ந்து கொள்ளையடிக்க முயன்ற சம்பந்தப்பட்ட நபரை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.