பேராவூரணியில் வட்ட சட்டப் பணிகள் குழு துவக்கம்
பேராவூரணியில் வட்ட சட்டப் பணிகள் குழு தொடங்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில், வட்ட சட்டப்பணிகள் குழு துவக்கி வைக்கப்பட்டது. நாடு முழுவதும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள, வட்ட மற்றும் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சட்டப்பணிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள அனைவருக்கும், சட்ட ரீதியான அனைத்து உதவிகளையும் வழங்க இந்த சட்டப்பணிகள் குழு ஏற்படுத்தப்படுகிறது. மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டம் கல்வி உரிமைச் சட்டம் குறித்தும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சட்டப்பணிகள் குழு மூலம் முகாம் நடத்தப்படுகிறது.
இந்த வகையில், பேராவூரணி நீதிமன்ற வளாகத்தில், வட்ட சட்டப் பணிகள் குழு அண்மையில் துவக்கி வைக்கப்பட்டது. மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதி என்.அழகேசன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், "வட்ட சட்டப் பணிகள் குழு மூலம், பொது மக்களுக்கு இலவச சட்ட உதவி வழங்கப்படுகிறது.
குடும்பப் பிரச்சனை, கொடுக்கல்- வாங்கல், சிறு வழக்குகள், வங்கி வழக்குகள், மகளிர் சுய உதவிக் குழு பிரச்சினைகள் உள்ளிட்டவைகளுக்கு விசாரணை நடத்தி, சமரசமாக பேசி தீர்வு காணப்படும். மேலும், சட்ட விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட உள்ளது" என்றார். அரசு குற்றவியல் உதவி வழக்கறிஞர் ஐ.பாண்டியராஜன், வழக்கறிஞர் சங்கம் தலைவர் எஸ்.மோகன், செயலர் குழ.செ.அருள்நம்பி, பொருளாளர் ஏ.சுசித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், காவல்துறை உதவி ஆய்வாளர் துரைராஜ், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். நிறைவாக, வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு இளநிலை உதவியாளர் பிரசன்னா நன்றி கூறினார்.