அரகண்டநல்லூரில் சார்பதிவாளர் அலுவலக கட்டிடம் திறப்பு
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் புதிதாக கட்டப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தை காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார்.
விழுப்புரம் மாவட்டம் ,அரகண்டநல்லூரில் தமிழக அரசின் சார்பில் ரூ.1 கோடியே 60 லட்சம் செலவில் புதிதாக சார்பதிவாளர் அலுவலகம் கட்டப்பட்டது. இதனை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதையடுத்து சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மனம்பூண்டி ஒன்றிய தி.மு.க. செயலாளரும், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினருமான அ.சா.ஏ.பிரபு, மாவட்ட துணை செயலாளர் மற்றும் திருக்கோவிலூர் நகர மன்ற தலைவர் டி.என்.முருகன் ஆகியோர் முன்னிலையில் அரகண்டநல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராயல் எஸ்.அன்பு குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.
விழாவில் திருக்கோவிலூர் நகர அவைத்தலைவர் டி.குணா, மாவட்ட சார்பதிவாளர் புவனேஸ்வரி, அரகண்டநல்லூர் சார்பதிவாளர் அன்பிற்கரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.