உழவர் சந்தைகளில் காய்கறி விலை உயர்வு

சேலம் மாவட்ட உழவர் சந்தைகளில் பீன்ஸ், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. வரத்து குறைவு காரணமாக பீன்ஸ் கிலோ ரூ.104-க்கு விற்பனையானது.

Update: 2024-04-09 03:43 GMT

சேலம் மாவட்டத்தில் 11 உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த உழவர் சந்தைகளுக்கு விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் விளையும் காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். மேலும் வெளிமாவட்டங்களில் இருந்து தக்காளி, உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், பீட்ரூட் போன்ற மற்ற காய்கறிகளும் உழவர் சந்தைகளுக்கு கொண்டு வரப்படுகின்றன. இதனிடையே காய்கறிகள் வரத்து குறைவால் நேற்று விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.

அதாவது கடந்த வாரம் கிலோ ரூ.98-க்கு விற்ற பீன்ஸ் நேற்று ரூ.104-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெளி மார்க்கெட்டுகளில் பீன்ஸ் கிலோ ரூ.115 வரை விற்பனையானது. உழவர் சந்தைகளில் கடந்த வாரம் ரூ.50-க்கு விற்ற அவரை நேற்று ரூ.80க்கும், கடந்த வாரம் ரூ.28-க்கு விற்ற தக்காளி நேற்று ரூ.35-க்கும் விற்பனையானது. இதேபோல் சின்னவெங்காயம் கிலோ ரூ.38-க்கும், பெரிய வெங்காயம் ரூ.34-க்கும், உருளைக்கிழங்கு ரூ.50-க்கும், கேரட் ரூ.78-க்கும், கத்தரிக்காய் ரூ.28-க்கும், பாகற்காய் ரூ.42-க்கும், முள்ளங்கி ரூ.28-க்கும், பீர்க்கன்காய் ரூ.40-க்கும், வெண்டைக்காய் ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த விலை உயர்வு குறித்து வியாபாரிகள் கூறும்போது, வெயில் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் சில காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை சற்று உயர்ந்துள்ளது. குறிப்பாக வெளி மாவட்டங்களில் இருந்து பீன்ஸ் வரத்து குறைந்துள்ளதால் அதன் விலை ரூ.100-யை தாண்டி விற்கப்படுகிறது. வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்புள்ளது என்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகளில் ரூ.1 கோடியே 20 லட்சத்து 70 ஆயிரத்துக்கு காய்கறிகள் விற்பனையானது.

Tags:    

Similar News