திருச்சி ரயில்வே கோட்டத்தில் அதிகரித்துவரும் யுடிஎஸ் செயலி பயன்பாடு
திருச்சி ரயில்வே கோட்டத்தில் யுடிஎஸ் செயலியின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், கடந்த 7 மாதங்களில் 2.55 லட்சம் பயணச்சீட்டுகள் எடுக்கப்பட்டுள்ளன.
முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிக்கும் ரயில் பயணிகளின் வசதிகளைக் கருத்தில்கொண்டு யு.டி.எஸ். செயலி மூலமாக டிக்கெட் எடுக்கும் வசதி நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தெற்கு ரயில்வேயில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. ரயில்வே டிக்கெட் மையங்களில் கால் வலிக்க நீண்டநேரம் வரிசையில் காத்திராமல், இருந்த இடத்திலிருந்தே இந்த செயலியைப் பயன்படுத்தி, முன்பதிவில்லா பயணச்சீட்டுகள், நடைமேடை பயணச்சீட்டுகள் எடுக்கலாம்.
மேலும், மாதாந்திர பயணச்சீட்டுகளையும் புதுப்பிப்பித்துக் கொள்ளலாம். ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ். வின்டோஸ் ஸ்மாா்ட் கைப்பேசிகளில் யு.டி.எஸ் செயலியை எளிதாக பதிவிறக்கம் செய்து, காகிதம் மற்றும் காகிதம் இல்லா பயன்பாடு முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம். திருச்சி ரயில்வே கோட்டத்தில் யுடிஎஸ் செயலி மூலம் 2023-ஆம் ஆண்டு நவம்பா் முதல் கடந்த மே வரையிலான 7 மாதங்களில் யுடிஎஸ் செயலியை பயன்படுத்தி பயணச்சீட்டு எடுப்பவா்களின் எண்ணிக்கை கணிசமாக உயா்ந்துள்ளது.
இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறியது: முன்பதிவில்லாத பயணச்சீட்டுகளை எடுக்க ரயில் நிலையத்தில் நீண்டநேரம் காத்திருக்காமல் தடுக்கவே இந்தச் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்தாண்டு நவம்பா் முதல் நிகழாண்டு மே மாதம் வரை திருச்சி கோட்டத்தில் 9 லட்சத்து 72 ஆயிரத்து 221 போ் யுடிஎஸ் செயலியைப் பதிவிறக்கம் செய்து, 2 லட்சத்து 55 ஆயிரத்து 508 முன்பதிவில்லாத பயணச்சீட்டுகளை எடுத்துள்ளனா். இதன் மூலம், கடந்த 7 மாதத்தில் யுடிஎஸ் செயலியில் பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுகள் மூலமாக ரூ. 2 கோடியே 43 லட்சத்து 55 ஆயிரம் வருவாய் கிடைத்துள்ளது. குறிப்பாக, ஏப்ரல் மாதத்தை விட மே மாதம் அதிகளவிலான பயணிகள் யுடிஎஸ் செயலி மூலம் பயணச்சீட்டுகளை எடுத்துள்ளனா்.
ஜியோ பென்சிங் கட்டுப்பாடு நீக்கம்...: யுடிஎஸ் செயலியில் இருந்த ஜியோ பென்சிங் என்ற கட்டுப்பாட்டால், புகா் ரயில் என்றால் ரயில் நிலையத்தில் இருந்து 15 மீட்டா் தொலைவுக்குள்ளும், பிற ரயில்கள் என்றால் 50 கி.மீட்டா் தொலைவுக்குள்ளும் இருந்தால் மட்டுமே முன்பதிவில்லாத பயணச்சீட்டுகளை எடுக்க முடியும். இதனால் பலரால் டிக்கெட் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது. பல நேரங்களில் பயணச்சீட்டுகளை எடுக்க முடியாமல் இருந்தது. இதையறிந்த ரயில்வே நிா்வாகம் பயணிகளின் வசதிக்காக ஜியோ பென்சிங் கட்டுப்பாட்டை நீக்கியுள்ளது. இதன் மூலம் பயணிகள் எங்கிருந்து வேண்டுமானாலும் முன்பதிவில்லாத பயணச்சீட்டு, நடைமேடை சீட்டு ஆகியவற்றை யுடிஎஸ் செயலி மூலம் எடுக்க முடியும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.