இந்தியா கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டம்
சங்ககிரியில் இந்தியா கூட்டணியில் திமுக சார்பில் போட்டியிடும் கொமதேக வேட்பாளர் அறிமுக கூட்டம்.
சேலம் மாவட்டம் சங்ககிரியில் திமுக கூட்டணி கட்சியான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் மாதேஸ்வரன் அறிமுக கூட்டம் சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான டி.எம்.செல்வகணபதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் மாதேஸ்வரன் இந்தியா கூட்டணியில் உள்ள சீட்டுகள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீட்டு எனவும் எதிர்க்கட்சிகள் வைத்துள்ள சீட்டுகள் வெத்து சீட்டுகள் என்றும் பேசினார்.
இதனைத் தொடர்ந்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும் போது சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடும் டி.எம். செல்வகணபதி அமோக வெற்றி பெற்று மத்திய அமைச்சராக அங்கம் வகிப்பார் எனவும் உங்கள் சின்னம் உதய சூரியன் எனவும் முழக்கமிட்டு பேசினார்.
இதனை தொடர்ந்து சேலம் மேற்கு மாவட்ட செயலாளரும், சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான டி.எம்.செல்வகணபதி என் மண் என் மக்கள் என விளம்பரம் செய்து கொண்டு வரும் பாஜக தமிழக மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது திரும்பி கூட பார்க்க வில்லை எனவும், தமிழகத்திலிருந்து அதிகளவில் வரியை பெற்றுக் கொள்ளும் பாஜக அரசு தமிழகத்தில் எதுவுமே செய்து தரவில்லை எனவும் அதற்கு துணை போனவர் தான் எடப்பாடி பழனிசாமி எனவும் குற்றம் சாட்டி பேசினார்.. இக்கூட்டத்தில் சங்ககிரி ஒன்றிய திமுக செயலாளர் ராஜேஷ், திமுக மாவட்ட அவை தலைவர் தங்கமுத்து, மாவட்ட துணைச் செயலாளர் சுந்தரம், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜ்குமார் உட்பட திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.