இந்தியா கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

காஞ்சிபுரத்தில் நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-19 14:27 GMT

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி மாவட்ட செயலாளர், தலைவர்கள் கூட்டம் தெற்கு மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் சுந்தர் தலைமையில் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி துவங்கி 7 கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையர் ராஜிவ்குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவ்வகையில், முதல் கட்டத்திலேயே தமிழக நாடளுமன்றத்திற்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் 19 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் அதற்கான பணிகளை தமிழக தேர்தல் ஆணையம் துவக்கி உள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட திமுக அலுவலக கூட்டரங்கில் , திமுக மாவட்ட செயலாளரும் , உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான சுந்தர் தலைமையில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், மதிமுக, விசிக , தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மையம் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் செல்வமும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளிலும் 5 லட்சம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும், இதற்கான பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் ஒருமித்த கருத்தாக தெரிவித்தனர் .

மேலும் தேர்தலுக்கு குறைந்த நாட்களே உள்ள நிலையில் , சட்டமன்ற தொகுதிகள் தோறும் இந்தியா கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டங்கள் நடத்தி, அடுத்த கட்ட தேர்தல் பணிகளை விரைவாக துவக்கவும், அதற்கான தேர்தல் பிரச்சார பயணங்களையும் வகுத்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News