ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு பயிற்சி
கள்ளக்குறிச்சியில் விவசாயிகளுக்கான ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
Update: 2024-03-10 08:05 GMT
கள்ளக்குறிச்சி வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கான ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம், பயிர் பாதுகாப்பு நோய் தடுப்பு மற்றும் சேமிப்பு இயக்குனரகம் சார்பில் தேசிய பூச்சி மற்றும் நோய் கண்காணிப்பு அமைப்பு என்ற செயலியை வேளாண் இணை இயக்குனர் அசோக்குமார் அறிமுகம் செய்து வைத்தார். மாவட்டத்தைச் சேர்ந்த 20 விவசாயிகளுக்கு இச்செயலியின் விளக்கம் குறித்து திருச்சி மத்திய ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மையம் மற்றும் வேளாண்மை துறை இணைந்து பயிற்சி முகாம் நடத்தினர். பயிற்சியில் இந்த செயலி மூலம் விவசாயிகள் பூச்சி, நோய் தாக்குதலை எளிதாக கண்டறிவது பற்றியும், ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையில் இரை விழுங்கிகள் மற்றும் ஒட்டுண்ணிகளை அடையாளம் காணுதல். இனக்கவர்ச்சி மற்றும் பிற ஒட்டும் பொறிகளின் பயன்பாடு ஆகியன குறித்து வேளாண் துணை இயக்குனர் சுந்தரம் மற்றும் உதவி இயக்குனர் அன்பழகன் விளக்கவுரையாற்றினர். மேலும் செயலி மூலம் அதிகப்படியான ரசாயன பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடுகளை குறைக்க முடியும். விவசாயிகள், தங்கள் பகுதிகளில் உள்ள நோய் தாக்குதலை அவர்களே கண்டறிந்து தீர்வு காணவும் வழிவகுக்கும் என திருச்சி மத்திய ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மைய அதிகாரிகள் கோவிந்தராஜ், சிவக்குமார், சுருளிராஜன் ஆகியோர் தெரிவித்தனர்.