குமரியில் கும்பப்பூ சாகுபடி தீவிரம் - இயந்திரம்மூலம் நாற்று நடவு
குமரியில் கும்பப்பூ பருவ நெல் நடவு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
Update: 2023-10-30 04:59 GMT
குமரி மாவட்டத்தில் இரு போக நெல் சாகுபடி நடந்து வருகிறது. வருடம் தோறும் கன்னி பூ சாகுபடி அதிக பரப்பளப்பில் நடந்து வருகிறது. மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடி என்பது அம்பை 16, திருப்பதி சாரம் 5 ரக நெல்களை அதிக விவசாயிகள் பயிரிடுகின்றனர். இதனைத் தவிர பாரம்பரிய நெல் ரகங்களையும் பயிரிட்டு வருகின்றனர். கும்பப் பூ சாகுபடியின் போது பொன்மணி திருப்பதி சாரம் 3 ரகங்களை பயிரிடுகின்றனர். தென்மேற்கு பருவ மழை ஏமாற்றியதாலும் கால்வாய்களில் தூர்வாரும் பணி நடந்ததாலும் ஆற்றுப்பாசனத்தை நம்பி இருந்த வயல் பரப்புகளில் சாகுபடி பணிகள் தாமதமாக தொடங்கியது. தற்போது மாவட்டத்தில் பருவ மழை பெய்து வருவதால் ஆற்றுப் பாசன பகுதியில் அறுவடை செய்ய முடியாத வயல்களில் தண்ணீர் தேங்கிய நிலையில் காணப்படுகிறது. இதனால் பல பகுதிகளில் நெற்கதிர்கள் முளைத்தது, மேலும் வைக்கோல்களை எடுக்க முடியாத நிலையில் நெல் அறுவடை செய்து வருகின்றனர். அறுவடை செய்யப்பட்ட பகுதிகளில் தற்போது முழு வீட்டில் கும்ப பூ சாகுபடி பணிகள் நடந்து வருகிறது. இயந்திரம் மூலம் நாற்று நடுவதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இது போல் கன்னிப் பூ அறுவடை நடக்காத வயல்களில் சிறிய இடத்தை தேர்வு செய்து அதில் நாற்றங்கால் தயார் செய்யும் பணியும் நடந்து வருகிறது. திருப்பதி சாரம், தாழக்குடி, இறச்சகுளம் உட்பட பல இடங்களில் தற்போது கும்ப பூ சாகுபடி நடந்து வருகிறது.