விழுப்புரத்தில் மாநில தகவல் ஆணையர் தலைமையில் விசாரணை முகாம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில தகவல் ஆணையர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டத்தில், தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ன் கீழ், தகவல் கோரியவர்கள் அளித்த புகார்கள் மீதான மேல்முறையீட்டு விசாரணை, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் துவங்கி 2 நாட்கள் நடந்தது.மாநில தகவல் ஆணையர் செல்வராஜ் தலைமை தாங்கி மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து அவர் கூறியதாவது:தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், தகவல் கிடைக்கப் பெறாத மனுதாரர்கள், மேல்முறையீடுக்காக நேரடியாக சென்னைக்கு வர சிரமமாக இருக்கும். அதனால், தமிழ்நாடு தகவல் ஆணையம் சார்பில், தலைமை ஆணையாளர் மற்றும் ஆணையாளர்கள் நேரடியாக சென்று, புகார் குறிப்பிட்ட மனுதாரர்கள் மற்றும் பொது தகவல் அலுவலர்களை சந்தித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.
அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில், 2 நாள்கள் விசாரணை நடந்தது. 46 மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது.குறிப்பாக ஊரக வளர்ச்சித்துறையில் கீழ் உள்ள விக்கிரவாண்டி, வானுார், கோலியனுார், காணை, செஞ்சி உள்ளிட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் மூலம் சரியாக தகவல் அளிக்காதது போன்ற மனுதாரர்கள் கடந்த 2021ம் ஆண்டு முதல் அளித்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு உள்ளது. மனுதாரர்களிடமிருந்து வரும் மனுக்கள் மீது, உடனடியாக விசாரணை மேற்கொள்ள பொது தகவல் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. தவறும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.மனுதாரர்கள் அளித்த மனுவின் மீது 30 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமகன்கள், தாங்கள் அனுப்பும் மனுவில் 10 ரூபாய்க்கான வில்லை ஒட்டி இருந்தால், அவர்களுக்கு பதில் அளிக்க வேண்டும்.
பெறப்பட்ட மனுக்கள் மீது சரியான விளக்கம் அளிக்கப்படாத பட்சத்தில், அவர்கள் மேல்முறையீடு செய்தும் சரியான பதில் அளிக்கப்படாமல் இருந்தாலும், இந்த சட்டத்தின் கீழ் 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம். மனுக்கள் மீது திருப்திகரமான முறையில் விளக்கம் அளிக்காத பட்சத்தில், துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு ஆணையர் செல்வராஜ் கூறினார்.