எமர்ஜென்சியை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியது திமுக தான் - அமைச்சர் துரைமுருகன்
திருச்சியில் நடந்த திமுக அணிகளுக்கான கருத்துரை கூட்டத்தில், திமுக பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்று பேசினார்.
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்துரை கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடந்தது. இதில் தி.மு.க., பொதுச்செயலாளரும் நீர் வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளி கல்வி துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடக்கி வைத்து பேசினார். அதில், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தி.மு.க தெற்கு மாவட்டம் மேற்கொண்டுள்ள பணிகள் குறித்து காட்ட விரும்புகிறேன். அதன்படி எங்கள் ரிப்போர்ட் கார்டை எங்கள் தலைமை ஆசிரியர் பொதுச்செயலாளரிடம் காட்டியுள்ளோம்.
2016ல் நடந்த தேர்தலில் நான் போட்டியிட விரும்பிய போது திருவெறும்பூர் தொகுதியை கேட்டேன். அப்பொழுது அந்த தொகுதியை கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களும் கேட்டார்கள். அந்த நேரத்தில் நம்முடைய தற்போதைய தலைவர் அந்த தொகுதியை என மகனுக்காக கேட்கிறேன் எனக் கூறியுள்ளார். அதை என்னிடம் துரைமுருகன் கூறினார். அதை கேட்டதும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது என்று பேசினார்.
தொடர்ந்து, அமைச்சர் துரை முருகன், ஆயிரம் கொடி இருந்தாலும் திமுக கொடி போல் எதுவும் இல்லை. அதை பார்க்கும் போதே ஒரு மகிழ்ச்சி வருகிறது. திருச்சியில் சற்று முன்னர் 100 அடியில் கொடியை ஏற்றினேன். எதையும் சாதிக்கும் திறமை அமைச்சர் அன்பில் மகேஸ்க்கு இருக்கிறது. ஆனால் எதுவும் தெரியாதாது போல் நடிக்கும் திறமையும் அவரிடம் உள்ளது. திமுகவே முதன் முதலில் தேர்தலில் போட்டியிடுவதாக முடிவு செய்து அறிவிக்கப்பட்ட இடமும் திருச்சி தான். அன்பிலார், பொய்யாமொழி ஏற்பாடு செய்த கூட்டத்தில் பேசி உள்ளேன். தற்போது மூன்றாவது தலைமுறையான மகேஸ் ஏற்பாடு செய்த கூட்டத்திலும் கலந்து கொண்டுள்ளேன். தமிழகத்தின் தலைநகர் மத்தியில் இருக்க வேண்டும் என்றால் அது திருச்சி தான் - அப்படியும் காலம் வரும். நம் இயக்கத்தின் மீது வீசிய புயல் இமயமலை மீது வீசியிருந்தால் இமயமலை சுக்குநூறாகியிருக்கும். ஒவ்வொரு தி.மு.க தொண்டனும் கட்சியின் காவல் தெய்வங்கள். இந்தியாவில் எமர்ஜென்சியை எதிர்த்து தீர்மானம் இயற்றிய ஒரே கட்சி திமுக தான். தலைவரின் பெயரை, கட்சியை காப்பாற்றுவாரா நம் தளபதி என்று எண்ணினேன் - ஒவ்வொரு இடத்திலும் உற்று நோக்குவேன், இதை நான் ஸ்டாலினிடமும் கூறி இருக்கிறேன் - ஆனால் அவர் சிறப்பாக செயல்பட்டு காட்டினார். ஆனால் தலைவரையே மிஞ்சக்கூடிய அளவில் நம் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செயல்படுகிறார். கட்சி தான் முதலில்.. பின்னர் தான் பாசம், குடும்பம் எல்லாம். அப்படித்தான் கலைஞர் இருந்தார். ஒட்டு மொத்த திமுகவில் உனக்கென்று ஒரு இடம் இருக்கும் உனக்கென்று ஒரு நாடு இருக்கும், அதில் திமுக கொடி இருக்கும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு புகழாரம் சூட்டினார்.