சேங்கல் ஊராட்சியில் புகையிலை இல்லாத ஊராட்சியாக ஜக்கம்பட்டி தேர்வு
சேங்கல் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் புகையிலை இல்லாத ஊராட்சியாக ஜக்கம்பட்டி தேர்வு செய்யப்பட்டது.
சேங்கல் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் புகையிலை இல்லாத ஊராட்சியாக ஜக்கம்பட்டி தேர்வு. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, சேங்கல் ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் சேங்கல் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், ஊராட்சி மன்ற தலைவர் அமராவதி பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற செயலாளர் பழனிவேல், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய உதவியாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர், தலைமை ஆசிரியர், கிராம மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சேங்கல் ஊராட்சியில் உள்ள ஜக்கம்பட்டி புகையிலை இல்லாத ஊராக தேர்வு செய்யப்பட்டது.
மேலும், சேங்கல் கடைவீதி பகுதியில் செயல்படும் டாஸ்மார்க் மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என தீர்மானம் இயற்றப்பட்டது. ஏற்கனவே, பயன்பாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், பழுதடைந்து உள்ளதால், ரூபாய் ஒரு கோடியே 26 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு ஒப்புதல் அளித்து பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்கு அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.