குண்டுமல்லி கிலோ ரூ.800-க்கு விற்பனை
மகா சிவராத்திரியையொட்டி சேலத்தில் பூக்கள் விலை நேற்று உயர்ந்துள்ளது.
சேலம் பழைய பஸ் நிலையம் பகுதியில் வ.உ.சி. பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டுக்கு ஓமலூர், காடையாம்பட்டி, வீராணம், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து குண்டுமல்லி, சன்னமல்லி, சாமந்தி, அரளி உள்ளிட்ட பல பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
குறிப்பாக சுபமுகூர்த்தம் மற்றும் பண்டிகை நாட்களில் பூக்களின் விலை அதிகரிப்பது வழக்கம். அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) மகா சிவராத்திரியையொட்டி நேற்று பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. இருப்பினும் மார்க்கெட்டில் பூ வாங்குவதற்காக ஏராளமானவர்கள் வந்தனர்.
இதனால் கூட்டம் அதிகமாக இருந்தது நேற்று முன்தினம் கிலோ ரூ.700-க்கு விற்ற குண்டுமல்லி நேற்று ரூ.800-க்கும், ரூ.600-க்கு விற்ற சன்னமல்லி ரூ.650-க்கும் விற்பனையானது. இதேபோல் மற்ற பூக்கள் விலையும் சற்று உயர்ந்து காணப்பட்டது. அதாவது காக்கட்டான், கலர் காக்கட்டான் கிலோ ரூ.450-க்கும், மலைக்காக்கட்டான் ரூ.400-க்கும், செவ்வரளி ரூ.350-க்கும், ஐ.செவ்வரளி ரூ.350-க்கும், அரளி, வெள்ளை அரளி, மஞ்சள் அரளி தலா ரூ.250-க்கும், நந்தியாவட்டம் ரூ.100-க்கும், சி.நந்தியாவட்டம் ரூ.150-க்கும், சம்பங்கி ரூ.160-க்கும், சாதா சம்பங்கி ரூ.250-க்கும் விற்பனை செய்யப்பட்டது.