காஞ்சி அரசு மருத்துவமனையில் மஞ்சள் காமாலை மாத்திரைக்கு தட்டுப்பாடு!
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், மஞ்சள் காமாலை நோய்க்கு மாதந்தோறும் வழங்கப்படும் மாத்திரைகள் மற்றும் , தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் தனியார் மருந்து கடைகளில் 12,000 ரூபாய் வரை செலவழித்து வாங்க வேண்டிய கட்டாயம் நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, ரயில்வே சாலையில் இயங்கி வருகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு, இதயம், மகப்பேறு, மனநலம், தீக்காயம், பொது மருத்துவம், குழந்தைகளுக்கான பிரிவு, டயாலிசிஸ், அறுவை சிகிச்சை என, பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில், 765 உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் வகையில் படுக்கை வசதி உள்ளது. புறநோயாளிகளாக 2,000 - 2,500 பேர் தினமும் சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நோயாளிகள் மட்டுமல்லாமல், ராணிபேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களின் எல்லையில், காஞ்சிபுரம் அருகே வசிக்கும் நோயாளிகளும், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக, சர்க்கரை, ரத்த அழுத்தம், தைராய்டு, கொலஸ்ட்ரால், இதய நோய், மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்களுக்கு பலரும் தொடர் சிகிச்சை பெறுகின்றனர். ஒவ்வொரு மாதமும், நுாற்றுக்கணக்கானோர் இந்த மாத்திரை பெறுகின்றனர். இந்நோயாளிகளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மாத்திரை மொத்தமாக வழங்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனையில் இலவசமாக வழங்கப்படும் இந்த மாத்திரைகளை நம்பி, நோயாளிகள் உள்ளனர். இம்மருந்துகள் வெளியில் விலை அதிகம் என்பதால், மாதந்தோறும் குறிப்பிட்ட நாட்களில், இந்த மாத்திரைகளை, நோயாளிகள் வந்து பெற்று செல்கின்றனர்.