சின்ன சேலம் அருகே தலைமை ஆசிரியர் வீட்டில் நகை,பணம் திருட்டு
தடயம் சேகரிக்கும் காவல்துறையினர்
சின்னசேலம் அடுத்த பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி கல்யாணி,58. தோட்டப்பாடி அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர். கல்யாணி நேற்று முன்தினம் வழக்கம்போல் பணிக்கு சென்றதால்,அவரது தாய் மாரியம்மாள் வீட்டில் தனியாக இருந்தார். மதியம் 2:00 மணியளவில் மாரியம்மாள் வீட்டிற்கு வந்த மர்ம நபர், கம்பி வேலி போடுவதற்கு வந்ததாக தெரிவித்தார். வீட்டில் யாரும் இல்லாததால் மாலை 4:00 மணிக்கு வருமாறு மாரியம்மாள் தெரிவித்து, வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்தார். சிறிது நேரம் கழித்து மாரியம்மாள் வீட்டிற்குள் சென்றபோது, பீரோவை உடைத்து அதிலிருந்த இரண்டரை சவரன் நகைகள் மற்றும் 12 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது. தகவலறிந்த சின்னசேலம் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர் சம்பவ இடத்துக்கு சென்று தடயங்களை சேகரித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.