கச்சேரி பிள்ளையார் கோயில் கும்பாபிஷேகம்- ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
Update: 2023-11-01 07:38 GMT
மயிலாடுதுறை நகரின் மையப் பகுதியான சின்னகடைத் தெருவில் பிரசித்தி பெற்ற, சித்தி விநாயகர் கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக, கடந்த மாதம் 30-ம் தேதி காவிரி ஆற்றிலிருந்து யானை மீது புனித நீர் எடுத்துவரப்பட்டு, யாகசாலை பூஜை தொடங்கியது. கும்பாபிஷேக தினமான இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து பூர்ணாகுதி பூஜை செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து புனித நீர் அடங்கிய கடங்கள் விமான கும்பத்தை அடைந்தன, தருமபுரம் ஆதீனம் 27-வது மகாசன்னிதானம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆகியோர் முன்னிலையில் விமான கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் 3000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.