கமலஹாசன் வருகை - மக்கள் நீதி மையத்தினர் பிரச்சாரம்
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் இன்று வெப்படையில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சியினர் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
லோக்சபா தேர்தல் வருவதையொட்டி அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்து, வேட்புமனு தாக்கல் செய்த பின், அந்தந்த பகுதி வேட்பாளர்கள் பொதுமக்கள் மத்தியில் வந்து தேர்தல் பிரச்சாரம் செய்யும் பணியை துவக்கி வருகின்றனர். ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் தேர்தல் பணிமனை திறந்து வைத்து, தேர்தல் பணிகளை தீவிரமாக செய்து வருகிறார்கள். தி.மு.க. சார்பில் வடக்கு, தெற்கு என இரு தேர்தல் பணிமனைகளை மாவட்ட செயலர் மதுரா செந்தில் தலைமையில் திறக்கப்பட்டது. அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பணிமணையை முன்னாள் அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்.
தி.மு.க. கூட்டணி கட்சிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் சார்பில், இன்று வெப்படை பகுதியில் அதன் நிறுவனர் கமலஹாசன் இரவு 08:00 மணியளவில் பிரச்சாரம் செய்யவுள்ளார். இது சம்பந்தமாக மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட செயலர் காமராஜ், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா தலைமையில், குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் தீவிர பிரச்சாரம் செய்யப்பட்டது. தி.மு.க. அரசின் சாதனைகள், தேர்தல் அறிக்கைகள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன.
இதில் மகளிரணி சொர்ணாம்பாள், மல்லிகா, சுஜி, விமலா, உஷா, சொர்ணாம்பாள், நிர்வாகிகள் அர்ஜூனர், கதிர்கமல், பாஷீர் உள்பட பலர் பங்கேற்றனர். இன்று காலை தி.மு.க. கூட்டணி சார்பில் வெப்படையில் ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ளது எனவும், ஆலோசனை கூட்டம் மற்றும் கமல் பிரச்சாரத்திற்கு அதிக ஆட்களை அழைத்து வர வேண்டி, வார்டு நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.