வறட்சி எதிரொலி - காமராஜ் சாகர் அணை திறப்பு!
முதுமலை வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் வனவிலங்குகளின் தாகம் தீர்க்க காமராஜ் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தற்போது கடும் வறட்சி நிலவி வருவதால் இந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே வனப்பகுதிகள் வறண்டு காணப்படுகிறது. இதனால் நீர்நிலைகள் வறண்டு புல்வெளிகள் காய்ந்தது, செடி கொடிகளும் கருகி காணப்படிகிறது. பசுந்தீவனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் இடம்பெயர்ந்து வருகின்றன. இதற்கிடையே வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் வாகனம் மூலம் வனத்துறையினர் தண்ணீர் நிரப்பி வருகின்றனர்.
ஆனாலும் யானை உள்ளிட்ட பெரிய வனவிலங்குகளுக்கு மட்டுமே அந்த தண்ணீர் பயன்படுவதால் மற்ற விலங்குகளுக்கு தாகம் தீர்க்க முடியாமல் போய்விடுகிறது. வனப்பகுதியில் வறட்சி ஏற்படும் போது வனவிலங்குகளின் தாகம் தீர்க்க காமராஜ் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். காமராஜ் சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள் மின்வாரியத்துக்கு கடிதம் எழுதினர். இதையடுத்து தற்போது காமராஜ் சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. அந்த தண்ணீர் 2 மதகுகள் வழியாக வெளியேறியது.
அந்த தண்ணீர் கால்வாய் வழியாக சோலூர், கல்லட்டி நீர்வீழ்ச்சி, வாழைத்தோட்டம், மாவனல்லா, செம்மநத்தம், சீகூர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக செல்கிறது. இதற்காக அமைக்கப்பட்ட கால்வாயில் தண்ணீர் சீராக செல்கிறதா, ஏதேனும் அடைப்பு உள்ளதா என்று வனத்துறையினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே தண்ணீரை தேடி அலையும் வனவிலங்குகள், இந்த கால்வாயில் செல்லும் தண்ணீரை குடித்து தாகம் தணித்து வருகின்றன. குறிப்பாக சீகூர், சிங்காரா வனப்பகுதிகளில் வாழும் வனவிலங்குகளின் தாகம் தீர்ந்து உள்ளது.
அங்கு பகலில் வெயில் அதிகமாக இருப்பதால், கால்வாயில் செல்லும் தண்ணீரில் சிறிது நேரம் வனவிலங்குகள் படுத்து ஓய்வு எடுக்கின்றன. முடிவில் இந்த தண்ணீர் மசினகுடி, சிங்காரா மின் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு மின் உற்பத்தி செய்யப்படுகிறது என்றும், கோடை மழை பெய்தால் வனப்பகுதியில் வனவிலங்குகளின் தாகம் தீர்க்க ஓரளவு தண்ணீர் கிடைக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.