காஞ்சிபுரம் : சைக்கிள் மீது லாரி மோதி விபத்து - இளம் பெண் உயிரிழப்பு
வெற்றிச்செல்வி
காஞ்சிபுரம், அன்னை இந்திரா காந்தி சாலை பகுதியை சேர்ந்தவர் வெற்றிச்செல்வி. எம்.காம். பட்டதாரியான இவர் காஞ்சிபுரம் பெரியார் நகர் பகுதியில் அமைந்துள்ள நேரு யுவகேந்திரா விளையாட்டு அமைப்பு நிறுவனத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார். இன்று பணி முடித்துவிட்டு தனது சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்த போது பெரியார் நகர் கூட்டு சாலை அருகே வாலாஜாபாத்தில் இருந்து உத்திரமேரூர் நோக்கி சென்று கொண்டு இருந்த கனரக லாரி வெற்றிச்செல்வி மீது மோதியது. இதில் நிலை குலைந்து சாலையில் விழுந்த அவர் லாரி சக்கரத்தில் சிக்கி சுமார் பத்து மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு தலையின் ஒருபகுதி முழுவதும் சிதைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தைக் கண்ட அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்க முயற்சித்த நிலையில் அவரது முகத்தின் ஒரு பகுதி சிதைந்து உடல் மட்டுமே கிடைத்தது. உடனடியாக லாரி ஓட்டுநரை பிடித்து அப்பகுதி மக்கள் தர்ம அடி கொடுத்து காஞ்சிபுரம் தாலுகா காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் விபத்தில் உயிரிழந்த வெற்றிச்செல்வி உடலை உடற்கூறு ஆய்விற்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தந்தை இல்லாத நிலையில், தாய் தனியார் உணவகத்தில் பணிபுரிந்து இவரை பட்டப்படிப்பு படிக்க வைத்துள்ளார்.மேலும் விபத்தை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், லாரி ஓட்டுநர் மிகுந்த போதையில் இருந்ததாக கூறினர்.