காஞ்சி சந்தவெளி அம்மனுக்கு தாய் மூகாம்பிகை அலங்காரம்
காஞ்சிபுரம் சந்தவெளியம்மன் கோவிலில், சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தாய் மூகாம்பிகை அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெருவில் உள்ள சந்தவெளியம்மன் கோவிலில், நேற்று முன்தினம் சித்திரை பெருவிழா துவங்கியது. மதியம் 12:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், கொல்லுார் தாய் மூகாம்பிகை அலங்காரமும் நடந்தது. இரண்டாம் நாள் உற்சவமான நேற்று இரவு 7:00 மணிக்கு காஞ்சி பாலா குழுவினரின் 108 திருவிளக்கு பூஜையும், சந்தவெளியம்மனுக்கு கர்ப்பரக்ஷாம்பிகை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மூன்றாம் நாள் உற்சமான நாளை இரவு 7:00 மணக்கு சந்தவெளி அம்மனுக்கு விஷ்ணு துர்க்கை அலங்காரம் நடக்கிறது.
தொடர்ந்து, பரதலாயாவின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. நான்காம் நாள் உற்சமான வரும் 19ம் தேதி காலை 7:00 மணிக்கு, 108 பால்குடங்களுடன் பூங்கரகம் புறப்பாடும், மதியம் 12:00 மணிக்கு மஹா அபிஷேகமும், அம்மன் வர்ணிப்பும் நடக்கிறது. மதியம் 1:00 மணிக்கு கூழ்வார்த்தலும், அன்னதானமும், மாலை 3:00 மணிக்கு ஊரணி பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிடப்படுகிறது. இரவு 7:30 மணிக்கு மலர், மின் அலங்காரத்தில் எழுந்தருளும் சந்தவெளியம்மன் முக்கிய வீதி வழியாக உலா வருகிறார். இரவு 10:00 மணிக்கு கும்பம் படையலிடப்படுகிறது. விழா நிறைவு நாளான 21ம் தேதி மதியம் 12:00 மணிக்கு உற்சவ சாந்தி அபிஷேகமும், மாலை 6:00 மணிக்கு சந்தவெளியம்மனுக்கு சாந்தசொரூபிணி அலங்காரமும், இரவு 7:00 மணிக்கு மஹாதீபாராதனையை தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட உள்ளது.