காங்கேயம் சௌடேஸ்வரி அம்மன் கோவில் பொங்கல் விழா

காங்கேயம் சௌடேஸ்வரி அம்மன்  கோவில் பொங்கல் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர்.

Update: 2024-05-02 02:40 GMT

காங்கேயம் பேருந்து நிலையம் அருகே உள்ள  தேவாங்கபுரம்  சௌடேஸ்வரி அம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 23ம் தேதி பூ சாட்டுதலுடன் நிகழ்சிகள் துவங்கியது. 26ம் தேதி குத்துவிளக்கு பூஜையும், 28 ம் தேதி அம்மை அழைக்கச்சென்று சக்தி சாமுண்டி அழைத்து கொலு வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. 29 ம் தேதி மாரியம்மனுக்கு கம்பம் நடுதல் நிகழ்ச்சியும், நேற்று முன்தினம் பால் குடம் எடுத்து வந்து அம்மனுக்கு செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

நேற்று பழையகோட்டை சாலையில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலய குளக்கரையில் இருந்து பூவோடு எடுத்து வந்து மாரியம்மனுக்கு செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியின்போது, ஏராளமான் பக்தர்கள் அலகு குத்தி வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இத்திருவிழாவில் கலந்துகொண்ட கோவில் குலத்தவர்களின் மகன்,மகள், மற்றும் குழந்தைகளின்  பாரம்பரிய நடனங்கள் மற்றும் சிலம்பாட்டம்,கத்தி சுற்றுதல், மான்கொம்பு ஆட்டம் போன்ற வீர விளையாட்டுகள் நடன வழிகளில் வெளிப்படுத்தி கடைவீதி பகுதிகளில் காண்போரை கண்கவர வைத்தது. இதை தொடர்ந்து மாலையில் மாவிளக்கு வழிபாடும், பரிவட்டம் கொண்டு வந்து  மாரியம்மனுக்கு செலுத்தும் நிகழ்சி  நடைபெற்றது. 

பின்னர்  சவுண்டம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிம்ம வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. பஜனை மடம் கிழக்கு வீதியில் வீதிஉலா துவங்கி, காமராஜ் நகர்   புதுவிநாயகர் வீதி, சுபாஷ் வீதி, திருவள்ளுவர் வீதி, புலிமா நகர், கார்த்திகை நகர், காந்தி நகர் வழியாக வந்து நிறைவடைந்தது.

Tags:    

Similar News