கார்த்திகை தீப திருவிழா இன்று நிறைவு: 3ம் தேதி வரை அமர்வு தரிசனம் ரத்து

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா இன்றுடன் நிறைவு: 3ம் தேதி வரை அமர்வு தரிசனம் ரத்து

Update: 2023-11-30 09:20 GMT

கார்த்திகை தீப திருவிழா இன்று நிறைவு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழா நாட்களில் தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதி உலாவும், இரவில் விநாயகர், முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரணி தீபம், மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி கடந்த 26ம் தேதி நடைபெற்றது. அன்று காலையில் கோவில் வளாகத்தில் பரணி தீபமும், மாலையில் 2,668 அடி உயர மலையில் மகா தீபமும் ஏற்றப்பட்டது. மகா தீபத்தையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

கடந்த 3 நாட்களாக கோவில் அருகில் உள்ள அய்யங்குளத்தில் தெப்ப உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம் காலையில் அருணாசலேஸ்வரர் கிரிவலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று மாலை சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவடைகிறது. அப்போது சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வர உள்ளார்.

மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் மலை உச்சியில் பிரகாசிக்கும். மாலை நேரத்தில் ஏற்றப்பட்டு தொடர்ந்து காட்சி அளிக்கும். மகா தீபத்தை தரிசனம் செய்ய தொடர்ந்து பக்தர்கள் வருகை தருவதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இதனால் வருகிற 3ம் தேதி வரை கோவிலில் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News