குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்
கடும் வறட்சியால் குடிநீர் ஆதாரங்களில் நீர் இருப்பு குறைந்து வருவதால் கரூர் மாநகராட்சி பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
கரூர் மாநகராட்சியில் உள்ள 1- முதல் 48 வார்டு வரை உள்ள பகுதிகள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, கரூர், இனாம் கரூர், தாந்தோணி மற்றும் சணப்பிரெட்டி பகுதிகளை உள்ளடக்கி உள்ளது. கரூர் மாநகராட்சிக்கு பிரதான குடிநீர் ஆதாரமாக இருக்கும் காவிரி ஆற்றில் தென்மேற்கு பருவமழை குறைவாக பெய்ததன் காரணமாக, மேட்டூர் அணையில் குறைந்த அளவு நீர் இருப்பு உள்ள காரணத்தினால், காவிரி ஆற்றில் போதுமான நீர்வரத்து இல்லை. இதன் காரணமாக குறைந்த நீர் ஆதாரத்தைக் கொண்டு கரூர் மாநகராட்சி பொதுமக்களுக்கு தற்போது குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும், நிலத்தடி நீர் மிகுந்த ஆழத்திற்கு சென்று விட்டதால், ஆழ்துளை கிணற்றிலிருந்து வரும் நீரின் அளவும் குறைந்துவிட்டது. எனவே, பொதுமக்கள் வருகின்ற பருவ மழை பொழிந்து, ஆற்றில் போதுமான நீர்வரத்து வரும் வரை, மாநகராட்சி மூலம் வழங்கும் குடிநீரை பொதுமக்கள் மற்றும் மாநகராட்சிக்கு சொந்தமான ஆழ்துளை கிணறு மூலம் பெறப்படும் நீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவிவரும் அதிக வெப்ப அலையின் காரணமாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பேருந்து நிலையம், மாநகராட்சி அலுவலகம் முன்புறம், பசுபதிபாளையம் பேருந்து நிலையம், வாங்கப்பாளையும் சுங்கச்சாவடி அருகில், மண்டலம் 4 அலுவலகம் முன்புறம் மற்றும் வெங்கமேடு பிள்ளையார் கோவில் முன்புறம் தண்ணீர் பந்தல் மாநகராட்சி மூலம் அமைக்கப்பட்டுள்ளது எனவும், தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் தங்களை வெப்ப அலைகிலிருந்து தற்காத்து கொள்ள நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை தேவை இன்றி வெளியே வர வேண்டாம் எனவும் அந்த செய்தி குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளனர்.