மயானத்துக்குச் செல்ல பாதையின்றி அவதியுறும் காவலாகுறிச்சி பொதுமக்கள்
ஆலங்குளம் அருகே தெற்கு காவலாகுறிச்சியில் மயானத்திற்கு பாதை இல்லாததால் பட்டியல் சமூக மக்கள் வயல்கள் வழியாக சடலத்தை எடுத்து செல்லும் அவல நிலையை போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Update: 2024-01-10 09:42 GMT
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே தெற்கு காவலாகுறிச்சியில் பட்டியல் வகுப்பைச் சோ்ந்த சுமாா் 300 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கான மயானம் ஊருக்கு தென்புறம் உள்ளது. ஆனால், இறந்தோரின் சடலங்களை ஊா்வலமாக எடுத்துச் செல்வதற்குப் பாதை வசதி இல்லையாம். இதனால், வயல் வழியே சடலத்தை எடுத்துச் செல்லும் நிலை உள்ளதாம். தற்போது, வயல்களில் நெல் பயிா் நடவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவ்வூரில் இறந்த முதியவரின் சடலத்தை நெற்பயிருக்கு நடுவே எடுத்துச் செல்லும் அவலம் ஏற்பட்டது. மயானத்துக்கு செல்ல உரிய பாதை ஏற்படுத்தித் தர வேண்டும் என அதிகாரிகளுக்குப் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப் படவில்லையாம். எனினும், அதே கோரிக்கையை அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.