கெங்கவல்லி : இயந்திர பழுதால் நோயாளிகள் அவதி
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி அரசு மருத்துவமனையில், 30 படுக்கை வசதி உள்ளது. இந்த மருத்துவமனைக்கு கெங்கவல்லி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து,தினந்தோறும் சர்க்கரை, ரத்த அழுத்தம், காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைக்காக 300க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வருகின்றனர்.
தமிழகத்தில், தற்போது குளிர்காலம் என்பதால் ஆங்காங்கே காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுவருகிறது. இந்த நிலையில், கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் ரத்த அணுக்கள் கண்டறியும் இயந்திரம் பழுதடைந்துள்ளது. இதனால், கடந்த ஒரு மாதகாலமாக மருத்துவமனைக்கு காய்ச்சல் மற்றும் 20க்கும் மேற்பட்ட ரத்த சம்மந்தமான பரிசோதனை மேற்கொள்ள முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இந்த பரிசோதனையை தனியார் ஆய்வகங்களில் ரூ.300 கட்டணம் செலுத்திபார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இல்லாவிட்டால், ஆத்தூர் அரசு மருத்துவம்மனைக்கு சென்று பரிசோதனை மேற்கொள்ளும் நிலை உள்ளது. இதுதவிர, கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக, இம்மருத்துவமனையில் லேப் டெக்னீசியன் இல்லை. எனவே, மாவட்டசுகாதார இணை இயக்குனர் இதுகுறித்து ஆய்வு செய்து, கெங்கவல்லி அரசு மருத்துவமனைக்குரத்த அணுக்கள் கண்டறியும் இயந்திரம் மற்றும் போதுமான மருத்துவர்களை நியம்மனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.