திருபுவனம் கோயிலில் நாளை குடமுழுக்கு: ஆளுநர் பங்கேற்பு
திருபுவனம் கோயிலில் நாளை குடமுழுக்கு விழாவில் ஆளுநர் பங்கேற்க உள்ளார்.
கும்பகோணம் அருகே திருபுவனம் கம்பஹரேஸ்வரசுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை (பிப்.2) நடைபெற உள்ள குடமுழுக்கு விழாவில் தமிழக ஆளுநர் பங்கேற்கிறார்.
தருமபுரம் ஆதீனத்தைச் சார்ந்த இக்கோயிலில் குடமுழுக்கு செய்வதற்காக ரூ. 4 கோடி மதிப்பில் திருப்பணிகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, குடமுழுக்கு விழா விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்ட வழிபாடுகளுடன் ஜனவரி 26 ஆம் தேதி தொடங்கியது.
பின்னர், ஜனவரி 29 ஆம் தேதி இரவு யாக சாலை பூஜைகள் தொடங்கின. வெள்ளிக்கி ழமை (பிப்.2) காலை 9 மணிக்கு கோபுரம், விமானங்கள் குடமுழுக்கும், 10 மணிக்கு மூலமூர்த்திகள் குடமுழுக்கும் நடைபெறவுள்ளன.
இவ்விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, தருமபுர ஆதீனம் குருமகா சந்நிதானம் கயிலை ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், கட்டளை தம்பிரான் சுவாமிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்கவுள்ளனர்.