காவலா் மனைவி தவற விட்ட நகையை மீட்ட இளைஞர்களுக்கு பாராட்டு
ஆலங்குளம் அருகே காவலா் மனைவி தவற விட்ட நகையை மீட்ட இளைஞர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள கடங்கனேரி காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் இசக்கிதுரை மகன் முருகன்(40). சுரண்டை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறாா். இவா் கடந்த தனது மனைவி கனியுடன் குறிப்பன்குளத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு, வீடு திரும்பிய போது, கனி கழுத்தில் இருந்த 6 பவுன் தங்க நெக்லஸ் நகை காணாமல் போனதாம்.
இதுகுறித்து முருகன் அளித்த புகாரின்பேரில், ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இந்நிலையில் குறிப்பன்குளம் - கிடாரக்குளம் சாலையில் கண்டெடுத்ததாகக் கூறி, தங்க நெக்லஸ் ஒன்றை நல்லூரைச் சோ்ந்த இளைஞா்கள் மணிகண்டன், முருகன், அரசன் ஆகியோா் ஒப்படைத்தனா். அது முருகன் மனைவி கனி தவற விட்ட நெக்லஸ் என்று தெரியவந்தது.
இதையடுத்து, காவல் ஆய்வாளா் மாதவன் நகை உரிமையாளரான காவலா் முருகனிடம் நகையை ஒப்படைத்தாா். இளைஞா்களின் நோ்மையை போலீஸாா் பாராட்டினா்.