குமரி : உறவினர்களால் துரத்தப்பட்ட மாற்று திறனாளி பெண்
சொத்துக்கள் மற்றும் பணம், நகைகளை பறித்து கொண்டு மாற்றுத்திறனாளி பெண்ணை வீட்டை விட்டு துரத்திய உறவினர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
குமரி மாவட்டம் குலசேகரம் அருகே அயக்கோடு பகுதியை சேர்ந்தவர் செளமியா (36). இவர் பார்வை குறைபாடுள்ள திருமணமாகாத மாற்று திறனாளி. இவரது தாய் தந்தையர் இறந்ததால் சகோதரன் பாதுகாப்பில் இருந்து வந்தார். சகோதரன் செளமியாவை வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பதாக வாக்குறுதி கொடுத்து, குடும்ப சொத்தான 14 சென்று நிலம், செளமியாவின் வீடு போன்றவற்றை தன் பெயருக்கு மாற்றி உடன்படிக்கை செய்துள்ளார்.
இந்நிலையில் சகோதரன் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற உடன் சகோதரரின் மனைவியும், மனைவியின் உறவினர்களும் சேர்ந்து, செளமியாவின் 20 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்க ரூபாயை எடுத்துக் கொண்டு வெளியே விரட்டி விட்டனர். அவரை அப்பகுதி சேர்ந்த உறவினர் ஒருவர் தனது வீட்டில் அழைத்து சென்று பராமரித்து வருகிறார். இது தொடர்பாக மாவட்ட கலெக்டர், எஸ் .பி, பத்னாபபுரம் துணை கலெக்டர் என மனுக்கள் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது குலசேகரம் போலீஸ் ஸ்டேஷன் வந்து கொண்டு இருக்கிறார். போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வருத்தத்துடன் கண்ணீர் மல்க பேசுகிறார். மாற்று திறனாளி பெண்ணுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு மாவட்ட நிர்வாகம் தலையிட்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.