வேட்டவலம் ஸ்ரீஞான வேங்கியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
Update: 2023-11-20 05:36 GMT
திருவண்ணாமலை, திருவண்ணாமலை- வேட்டவலம் சாலை சந்திப்பு பகுதியில் ஸ்ரீஞான வேங்கி அம்மன் சமேத ஸ்ரீ.ஆதி பரமேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஸ்ரீ.வரசித்தி விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ ஐயப்பன், ஸ்ரீநவகிரகங்கள், ஸ்ரீ சண்டிகேஸ்வரர், ஸ்ரீ ஆகாய லிங்கம் மற்றும் சப்த மாதர்கள், விஷ்ணு துர்க்கை உள்ளிட்ட பல்வேறு சந்நிதிகள் அமைந்துள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 18ஆம் தேதி சனிக்கிழமை கோ பூஜை உடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து நேற்று காலை 9 மணி அளவில் யாகசாலையில் 108 மூலிகைகள், நவதானியங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான மூலிகைகளைக் கொண்டு சிறப்பு ஹோம்ம் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை 9 மணி அளவில் இரண்டாம் கால பூஜை சிறப்பாக நடைபெற்று யாகசாலையில் நிறைவடைந்து. பூர்ணாஹூதியும் விமர்சையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பஞ்ச கற்பூர ஆரத்தி காட்டப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க யாகசாலையில் இருந்து கலசத்தில் புனித நீர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு முதலில் ஸ்ரீஞான வேங்கி அம்மன் ஆலயம் மற்றும் ஆதி பரமேஸ்வரர் ஆலயத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பரிவார தெய்வங்களான விநாயகர் முருகர் ஐயப்பன் சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு விமானங்களுக்கும் தனித்தனியே கும்பாபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து கோவில் கருவறையில் உள்ள விநாயகர் முருகர், ஐயப்பன் மற்றும் மூலவரான ஞான வேங்கி அம்மன், ஆதி பரமேஸ்வரர் ஆகியோருக்கு கலசத்திலிருந்து புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.