காளியப்பனூரில் பகவதி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா
காளியப்பனூரில், பகவதி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்.
Update: 2024-02-26 04:15 GMT
கரூர் மாவட்டம், தாந்தோணி மலை அருகே உள்ள காளியப்பனூரில், அமைந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விநாயகர், அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன், அருள்மிகு ஸ்ரீ பழனி ஆண்டவர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. ஊர் கொத்துக்காரர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்த கும்பாபிஷேக விழாவில், நேற்று இரண்டாம் காலம் மற்றும் மூன்றாம் கால பூஜைகள் நடைபெற்றது. இன்று அதிகாலையில் நான்காம் கால பூஜைகள் நடைபெற்று, யாக வேள்வியில் யாகம் வளர்க்கப்பட்டது. அதில் வைக்கப்பட்ட புனித நீரை பூஜித்து பின்னர் கோவில் கோபுரத்திற்கு எடுத்துச் சென்று கோவில் கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேக விழாவை விமரிசையாக நடத்தினர். இந்த கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர் விழா கமிட்டியினர்.