கும்பகோணத்தில் மூதாட்டியிடம் நகை திருடிய பெண்ணுக்கு சிறை
கும்பகோணத்தில் மூதாட்டியிடம் நகை திருடிய பெண்ணுக்கு சிறை விதிக்கப்பட்டுள்ளது.
கும்பகோணம் மகாமக குளம் மேல் கரையைச் சேர்ந்தவர் சுவாமிநாதன் இவருடைய மனைவி நீலாவதி (வயது 75) இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த நீலாவதியிடம் கும்பகோணம் சக்கரபாணி வடம் போக்கித் தெருவை சேர்ந்த செண்பகராமன் மனைவி செல்வி (வயது 30)என்பவர் வீட்டு வேலை கேட்டு வந்துள்ளார். அப்போது நீலாவதி வேலை எதுவும் இல்லை எனக் கூறிவிட்டு வீட்டுக்குள் குளிக்கச் சென்றார்.
இதனை அறிந்த செல்வி மறுபடியும் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த பீரோவில் இருந்த 52 பவுன் நகைகளை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றார். இது குறித்து நீலாவதி அளித்த புகாரின் பேரில் கும்பகோணம் மேற்கு காவல் ஆய்வாளர் ரமேஷ் குமார் மற்றும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி செல்வியை கைது செய்து அவரிடமிருந்து நகைகளை மீட்டனர்.
இது தொடர்பாக கும்பகோணம் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-1 இல் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இளவரசி குற்றம் சாட்டப்பட்ட செல்விக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.